பண்டைய தமிழகத்தில் கல்விக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. கல்லாதவன் மனது “இருளின் உறைவிடம்” எனவும், கற்பதற்கான காலமாக இளமைப் பருவமும் கருதப்பட்டன.[1]

பழந்தமிழக ஆட்சியாளர்கள் தங்கள் கடமையை உணர்ந்திருந்தனர். தங்களது முதன்மை கடமையாக கல்வி வளர்ச்சியைக் கருதினர். எனவே அரசர்களும் தலைவர்களும் மக்கள் கல்விபெற அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தனர்.[2] தமிழ் அற நூலான நாலடியார் “மிகுதியான நூல்களை ஆண்கள் சேகரித்து படிப்பது அவர்கள் வீடு முழுக்க ஒலித்தது” என குறிப்பிடுகிறது. அவர்கள் அறிவியல், கணிதம், பொறியியல், வானியல், தர்க்கம், நெறிமுறைகள் போன்றவற்றைப் படித்தனர்.[3]

கல்வி பரவலாகவும் உயர் தரமானதாகவும் இருந்தது. சமணப் பள்ளிகளிலும் புத்த விகாரைகளிலும் இருந்த நூலகங்கள் மக்களிடையே மேம்பட்ட கல்வியைப் பெற உதவின.[4] சங்க இலக்கியங்கள் மக்களின் அனைத்துப் பிரிவினரும், பெண்களும் முழு கல்வியறிவுபெற்று தகுதியானவர்களாக இருந்ததைக் காட்டுகின்றன, பழங்கால நாகரீகங்களில் பெண்கல்வியறிவு மிகுந்த மக்களாக தமிழர் விளங்கியுள்ளனர்.

பெண்களும் கல்வியும்
சங்க கால பெண்களுக்கு இலக்கியம், இசை, நாடகம் போன்றவற்றில் நல்ல பயிற்சி வழங்கப்பட்டது. அக்காலத்தில் பல பெண்கள் இசையிலும் பிற கலைகளிலும் புகழ்பெற்று விளங்கியதை சங்க இலக்கியச் சான்றுகள் சுட்டுகின்றன.

சங்க கால கவிஞர்களில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பெண்கள் ஆவர்.

சங்கம் மருவிய காலம்

பல்லவர் பிராகிருதத்தையும் சமசுகிருதத்தையும் ஆதரித்தனர். அவர்கள் சமசுகிருதப் பள்ளிகளை காஞ்சியிலும், சிலவற்றை புதுச்சேரியிலும் நிறுவினர். இவை தமிழகத்திலும் தென்னகத்தின் பிற பகுதியிலிருந்தும் சிறந்த மாணவர்களை கவர்ந்தன. அடுத்த சில நூற்றாண்டுகளுக்கு சிறந்த மாணவர்களை இலங்கை, சீனா போன்ற நாடுகளில் இருந்து ஈர்க்கக் கூடியதாக பவுத்தம் இருந்தது. போதி தருமன் குறிப்பிடத் தக்கவராவார். இக்கால கட்டத்தில் தமிழ் இலக்கியங்கள் சரிவு கண்டன, என்றாலும் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற ஐம்பெருங் காப்பியங்கள் படைக்கப்பட்டன. இந்தக் காப்பியங்கள் சங்க அக இலக்கிய மரபுகளான பாத்திரத்தின் பெயரையோ அல்லது அவர்களைப் பற்றிய குறிப்பையோ குறிப்பிடாத தன்மையிலிருந்து மாறத் துவங்கியதைக் காட்டின, இவை சமசுகிருதத்தின் செல்வாக்கு வளர்ந்து வருவதைக் காட்டின.

சங்க காலத்துக்கு பிற்பட்ட காலம்

பல்லவர் காலத்தில் தமிழகத்தில் சமண சமயத்தின் தாக்கம் கூடுதலாக இருந்தது. தமிழகமெங்கும் பரவலாக சமணத் துறவிகள் வாழ்ந்துவந்தனர். இத் துறவிகள் ஓய்வு எடுப்பதற்கு பாறைக் குன்றுகளிலும், குகைகளிலும் கல்லில் படுக்கைகளை வெட்டி வைத்திருந்தனர். பள்ளிகொள்ளும் அந்த இடம் பள்ளி எனப்பட்டது. அந்த இடங்களில் அவர்கள் மாணவர்களுக்கு கல்வியும் போதித்தனர். இந்தப் பள்ளிகளில் துவக்கத்தில் சமயக் கருத்துகளும், பின்னர் அறநெறிகளும் போதிக்கப்பட்டன. எழுத்தறிவும் இந்தப் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்பட்டது. அதனால்தான் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் இடம் பள்ளி என்று பின்னாளில் பெயர் வந்தது. இப்படி மலைக்குன்றுகளில் செயல்பட்டுவந்த சமணப் பள்ளிகள், பிற்காலத்தில் சமண மதம் செல்வாக்கு இழந்ததால் மறைந்து போயின.

சங்க காலத்துக்குப் பிறகு, தமிழகத்தில் பிராமணர் குடியேற்றமும் அவர்களுக்கு வேதங்களை கற்பிக்கும் காலமும் தோன்றியது. பிராமணர்கள் பல சலுகைகளை பெறத் துவங்கினர். குரு சிஷ்ய பாரம்பரியம் அறிமுகப்படுத்தப்பட்டது, இந்த கட்டத்தில் பொது மக்கள் மத்தியில் இருந்த பெண்களின் கல்வி நிலை வீழ்ச்சி அடைந்தது. சாதி ரீதியாக கல்வி மறுக்கப்படும் சூழலை கீழ்காணும் மனுஸ்ருமிதி உத்தரவுகள் கூறுகின்றன, அதன்படி பிராமணர் சூத்திரர்களுக்கு கற்பித்தால், அவர் நரகத்தில் வீழ்வார், சூத்திரர் வேதத்தைக் கேட்டால் அதற்கு தண்டனையாக அவன் காதுகளில் ஈயத்தை உருக்கி ஊற்ற வேண்டும். பழுக்கக் காய்ச்சிய எழுத்தாணியைக் கொண்டு அவனது நாவில் சூடு இடவேண்டும் என்பன போன்ற ஒடுக்குமுறைகள் கல்வி கற்பதற்கு எதிராக தோன்றின.

திண்ணைப் பள்ளிகள்

சமண சமயத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு பிற்காலத்தில் ஓரளவுக்குப் பரவலான கல்வியை அளிக்கும் பணியைத் திண்ணைப் பள்ளிகள் மேற்கொண்டன. சென்னை மாகாணத்தில் 1822 இல் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திண்ணைப் பள்ளிகள் இருந்ததாக அப்போது மாகாண ஆளுநராக இருந்த தாமஸ் மன்ரோ காலத்தைய கணக்கெடுப்பு கூறுகிறது. அக்கால காலத்தில் சென்னை மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு பள்ளி இருந்ததாகத் தெரிகிறது. இந்த திண்ணைப் பள்ளிகளிலேயே மாணவர்கள் பரவலாகப் படித்தனர். இக்காலகட்டத்திற்குப் பிறகுதான் ஆங்கிலேய அரசு தற்போது புழக்கத்தில் உள்ள பள்ளி என்ற மேலைநாட்டுக் கல்விமுறையை தமிழகத்தில் புகுத்தியது. அதன் பிறகே கிறித்தவ மறைபணியாளர்களாலும், அரசினாலும் தற்போதுள்ள முறையில் பள்ளிகள் அறிமுகப்படுத்தின.


0 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *